Tuesday, December 22, 2015

On Tuesday, December 22, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அழகுசுந்தரி (வயது 18). இவர் தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
அழகுசுந்தரியும், அவருடன் படிக்கும் 2 மாணவிகளும் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புகாட்டில் தனியார் ஆஸ்பத்திரிக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். மாணவிகள் கடந்த 2 மாதங்களாக அங்கு தங்கி இருந்து பயிற்சி பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அழகுசுந்தரி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனையில் இருந்து தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மார்த்தாண்டத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அழகுசுந்தரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புதுக்கடை போலீசில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாணவியின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அழகுசுந்தரியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வந்த உறவினர்கள் மறு பிரேதபரிசோதனை செய்யக்கோரி தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அழகுசுந்தரியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
இதன் பின்னரும் அழகுசுந்தரியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும், தனியார் நர்சிங் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
மேலும் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் ஏராளமானோர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களுடன் சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் ரவிகுமாரை சந்தித்து தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகி மீதும், காப்புக்காடு மருத்துவமனை டாக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், மாணவி மரணம் குறித்து வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் உத்தரவு படி இன்று ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் இளங்கோ தலைமையில் அழுகுசுந்தரி உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொள்கிறார். இந்த பேச்சுவார்தை முடிவை பொறுத்தே அழகுசுந்தரி உடலை வாங்க உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments: