Saturday, February 20, 2016

On Saturday, February 20, 2016 by Unknown in , ,    
திருச்சியில் இருந்து பணகுடி நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த செல்வபெருமாள் ஓட்டி வந்தார். இன்று காலை 8 மணி அளவில் லாரி கயத்தாறு டோல் கேட் அருகே வந்தது. அப்போது திடீரனெ கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் பண வசூல் கவுன்டர் மீது லாரி மோதியது.
இதில் அங்கு பணம் வசூல் செய்து கொண்டிருந்த வடக்கு இலந்தகுளத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 35) என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விபத்து நடந்ததையடுத்து டோல்கோட் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த காளிராஜ் கூறும் போது, ‘நெல்லை– மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள முக்கியமான டோல்கேட் கயத்தாறு ஆகும். இங்கு உள்ள பண வசூல் கவுன்டர்களுக்கு பாதுகாப்பாக தடுப்பு சுவர், தடுப்பு கம்பிகள் என எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இது குறித்து நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் பலன் இல்லை. எனவே உடனடியாக நிர்வாகம் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் டோல்கேட் வழியாக வாகனங்கள் செல்வது பாதிக்கப்பட்டது. இதனால் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் வாகனங்கள் தேங்கி நின்றன. பின்னர் 2 கவுன்டர்கள் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் அந்த வழியாக சென்றன. 

0 comments: