Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



காங்கயம் அருகே வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது, முதன்மை வாக்குச் சாவடி அலுவலருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடுமலை அருகே, கரட்டுமடம் ஜி.கே.என். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (54). அவர்,  காங்கயம் தொகுதி, வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியின் முதன்மை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, காலை 11.30 மணி அளவில் ஆசிரியர் செல்வராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவிச் சிகிச்சைக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செல்வராஜ் உயிரிழந்தார். அதையடுத்து அவரது சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இத்தகவல் அறிந்ததும் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் என்.ராஜன், துணைத் தேர்தல் அலுவலர் கே.ராஜகோபால் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாக்குப் பதிவின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, முதன்மை வாக்குச் சாவடி அலுவலர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.

0 comments: