Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடும்பத்தினரை சந்தித்தனர்.

ஐதராபாத்:

லிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த், விஜய் குமார் ஆகியோர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். சிர்தே பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா, தெலுங்கானாவைச் சேர்ந்த பலராம் கிஷன் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் 414 நாட்கள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு பேராசிரியர்களும் கடந்த 15-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து லிபிய ராணுவம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, தீவிரவாதிகள் பிடியில் இருந்து மீண்டு வந்த இரண்டு பேராசிரியர்களும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் விமானம் மூலம் இன்று காலை ஐதராபாத் வந்து சேர்ந்தனர். அப்போது அவர்களின் குடும்பத்தினர் அவர்களை கண்ணீர்மல்க வரவேற்று மகிழ்ந்தனர்.

அப்போது தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததை நினைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றார் கோபிகிருஷ்ணா. மேலும், தங்களை விடுவித்து பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட லிபிய ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதேசமயம், தன்னை சிறைப்பிடித்தது குறித்த தகவல் எதையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

0 comments: