Friday, December 16, 2016

On Friday, December 16, 2016 by Unknown in    
திருப்பூர்,
சாமளாபுரத்தில் 35 குடியிருப்புகளை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறை நோட்டீசு வழங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாதிருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட சாமளாபுரம் 1–வது வார்டு கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
கருப்பராயன் கோவில் வீதியில் 1 ஏக்கர் 85 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 50 சென்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 35 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்து முறையிட்டோம்.
காலி செய்ய நோட்டீசுபொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் குடியிருப்பதாகவும், அவர்கள் தடையின்மை சான்று கொடுத்ததும் பட்டா வழங்குவதாக தெரிவித்தார்கள். சாமளாபுரம் பேரூராட்சியிலும் எங்களுக்கு பட்டா வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றிக்கொடுத்தார்கள். ஆனால் இதுவரை பட்டா எங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்து எங்களுடைய வீடுகளை காலி செய்யுமாறு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு நோட்டீசு கொடுத்தார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ள நிலையில், எங்களுடைய 35 வீடுகள் உள்பட 59 பேரின் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மற்றொரு அறிவிப்பு நோட்டீசும் கொடுத்துள்ளனர். இதில் இன்னும் 7 நாட்களில் வீடுகளை காலி செய்யுமாறு அறிவித்துள்ளனர். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் மாற்று இடம் வழங்கி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கலெக்டரை சந்தித்தனர்இதைத்தொடர்ந்து கலெக்டர் எஸ்.ஜெயந்தியை சந்தித்து முறையிட்டனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் விவரம் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்

0 comments: