Sunday, April 23, 2017

On Sunday, April 23, 2017 by Unknown in    





திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பழனிக்குமார் (வயது 35). இவர், மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயை துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்ததாக தெரிகிறது.
இதை கண்ட சமூக ஆர்வலர் பழனிக்குமார் திடீரென அந்த பகுதியில் உள்ள ஆழமான கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கினார். பின்னர் அவர் கழிவுநீர் கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்ட பகுதிக்கு உள்ளே சென்று போராட்டம் நடத்தினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் சுகாதார அதிகாரி முருகன் ஆகியோர் கழிவுநீர் கால்வாயின் உட்புறம் இருந்த பழனிக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதிகாரிகள் உறுதி
மேலும், உடனடியாக வெளியே வருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநகராட்சி உதவி கமி‌ஷனர் சம்பவ இடத்துக்கு வந்து துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே வெளியே வருவேன் என்று பிடிவாதமாக உள்ளேயே இருந்தார். இதையடுத்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பழனிக்குமார் போராட்டத்தை கைவிட்டு வெளியே வந்தார்.
சுமார் 1 மணி நேரம் மேல்பகுதி மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்க்குள் தொடர்ந்து இருந்ததால் வெளியே வந்த பழனிக்குமார் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி சமூக ஆர்வலர் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 comments: