Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சிகள் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினரும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும், வியாபார சங்கங்களும், அமைப்புகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு
இந்த நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறியதாவது:–
உலகத்திற்கே உணவளிக்க கூடிய விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 41 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் நாங்களும் பங்கேற்க உள்ளோம். அந்த வகையில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 169 திரையரங்குகளிலும் 2 காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி மற்றும் பகல் 2 மணி காட்சிகள் திரையிடப்பட மாட்டாது. மாலை காட்சியும், இரவு காட்சியும் வழக்கம் போல நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்

0 comments: