Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    
தாராபுரம்–கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 48 இருந்தன. இதையடுத்து காரை ஓட்டி வந்த மூலனூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமாரை (வயது 32) பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கொண்டு வந்தது போலி மதுபாட்டில்கள் என்பதும், அவற்றை தாராபுரம்–திருப்பூர் ரோட்டில் வேங்கிபாளையம் பகுதியில் விவசாயி பழனிசாமி தனது தென்னந்தோப்பில் நடத்தி வரும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
455 லிட்டர் எரிசாராயம்
பின்னர் அவரை அழைத்துக்கொண்டு தென்னந்தோப்புக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அதில் 2 பேர் மட்டும் போலீசில் சிக்கினார். அவர், செங்கப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (35), வெள்ளகோவிலை சேர்ந்த செந்தில்வெங்கடேஷ் (35) என தெரியவந்தது.
உடனே போலீசார் தென்னந்தோப்பில் இருந்த ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது, அங்கு 455 லிட்டர் எரிசாராயமும், 100 போலி 





மதுபாட்டில்களும் இருந்தன. இதுதவிர காலி மதுபாட்டில்கள், அதற்குரிய மூடிகள், புதுச்சேரி மதுபான வகை லேபிள்கள், அசல் மதுபான பாட்டில் போல் ‘சீல்’ வைக்க கையால் இயக்கப்படும் எந்திரம் ஆகியவை இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
ரமேஷ் கொடுத்த தகவலின் பேரில், செங்கப்பள்ளியை அடுத்த காளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 530 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை பதுக்கி வைக்க உதவிய அந்த தோட்ட காவலாளியான செங்கப்பள்ளியை சேர்ந்த ராமலிங்கத்தை (35) போலீசார் பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சதீஸ்குமார், ரமேஷ், செந்தில்வெங்கடேஷ், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய பழனிசாமி உள்ளிட்ட 4 பேரை தேடிவருகிறார்கள்

0 comments: