Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று திருப்பூரில் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், 8–வது ஊதிய மாற்றம் குறித்து சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய பகிர்வை வழங்க வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடத்தை காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதன்தொடர்ச்சியாக அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு வட்ட கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு வட்டக்கிளை தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், வணிகவரி பணியாளர்கள் சங்கம், சாலைப்பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. உதவியாளர் முதல் ஒன்றிய ஆணையாளர்கள், தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
பணிகள் பாதிப்பு
இதேபோல் அரசு ஊழியர் சங்கம் அவினாசி வட்டக்கிளை சார்பில் அவினாசி தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டக்கிளைகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 3 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவுத்துறை, கருவூலத்துறை, வேளாண்மைத்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று (புதன்கிழமை) 2–வது நாளாக அரசு ஊழியர்கள் சார்பில் அந்தந்த வட்டக்கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்

0 comments: