Thursday, May 09, 2019

On Thursday, May 09, 2019 by Tamilnewstv in ,    
 திருச்சி அருகே உள்ள மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 24 வயதாகும் இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசவம் நடந்து முடிந்தது. அப்போது முதல் இவரது வயிறு பகுதி வீங்கிய வடிவில் இருந்துள்ளது. வயிறு தொப்பை காரணமாக இவ்வாறு இருக்கலாம் என்று பெரியவர்கள் கூறிய ஆலோசனையின்படி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

 இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு வயிற்றில் வலி அதிகமாகியுள்ளது. இதனால் வேறு வழியின்றி திருச்சி புத்தூரில் உள்ள "க்யூ மெட்" மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை அருகே உள்ள சினைப்பையில் இருந்து இந்த கட்டி முளைக்கத் தொடங்கியுள்ளது. இதை அவரும், அவரது குடும்பத்தாரும் கவனிக்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக அந்த கட்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே அவர்கள் உள்ளூர் மருத்துவரின் ஆலோசனையின்படி எங்களது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதனடிப்படையில் ஸ்கேன் பரிசோதனைக்குப் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்


 மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.

0 comments: