Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 31

வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலித் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் பலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் இவர்களும் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பணமின்றி கஷ்டப்படும் சூழலில், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது, வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மாதத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை, டிஐஜி பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழ்நாடு, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இதனை மீறி வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: