Friday, March 13, 2020

On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி முதலமைச்சராக பதவியேற்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை கட்டாயமாக இன்று அறிவித்து விடுவார் என்ற ஆவலில் திருச்சி ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர், சிந்தாமணி அண்ணாசிலை அருகேயும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையடுத்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரஜினி பேசிய பேச்சு, அறிவிப்புகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த பட்டாசுகளை வெடிக்காமல் திருப்பி எடுத்துச் சென்றனர். அதேபோல் இனிப்புகளையும் வழங்காமல் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எங்களது தலைவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம். இதற்காக காலை 5 மணி முதல் காத்திருந்தோம். அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்து விட்டார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.


தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். இரண்டு ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். அந்த துணிச்சல் இருப்பதால்தான், நாங்கள் அவர் பின்னால் நிற்கிறோம். அவர்களை எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தேர்தல் நேரத்தில் எங்களது பணியை அவர் பார்ப்பார். அவர் வந்தால் நன்றாக இருக்கும். வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்.

ரஜினி வந்தால் ஓட்டு போடுவோம் என்று பெண்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ரஜினி கைகாட்டும் ஆளுக்கு ஓட்டுப்போட நாங்கள் தயாராக இல்லை என்று கூறுகின்றனர். அவர் கூறிய வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியுமே தவிர, வேறு யாராலும் நிரப்ப முடியாது. மன்ற நிர்வாகிகளுக்கு பதவி இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், அவர் முதலமைச்சராக ஆட்சியில் அமர வேண்டும். அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி' என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொதுமக்களை விட அவரது ரசிகர்கள் இதை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அவரது இன்றைய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: