Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Unknown in , ,    



உடுமலை, 22   : பிரதான கால்வாய் பாசனம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து மடத்துக்குளத்தில் நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பெறப்படும் நீரைக்கொண்டு திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆற்று வழியாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை போதிய அளவு பெய்யாததாலும், அடிக்கடி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் பிரதான கால்வாய் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  தற்போது அணையில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் தென்னைகளை காக்கவும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மடத்துக்குளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசாமியிடம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனு கிடப்பில் போடப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து மடத்துக்குளம் நால்ரோட்டில் நாளை (23ம் தேதி) போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தரவு தெரிவித்துள்ளன.
இதில் விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அனைத்து கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 comments: