Friday, July 25, 2014

On Friday, July 25, 2014 by Unknown in , ,    





திருப்பூரில் 10 நாள் தொடர் வகுப்பு உற்சாகமாகத் தொடங்கியது
 திருப்பூர், ஜூலை 24-
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய சமூகம் அன்றும், இன்றும் என்ற தலைப்பில் 10 நாள் காலை நேரத் தொடர் வகுப்பு உற்சாகமாகத் தொடங்கியது.
திருப்பூர் அவிநாசி சாலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில், முதல் நாளான வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த வகுப்புக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் தலைமை வகித்தார். கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் மார்க்சியம் என்றால் என்ன? எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த வகுப்பில் வழக்கம் போலவே இந்த ஆண்டும் பெரும்பான்மையானோர் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். திருப்பூர் மட்டுமின்றி பல்லடம், அவிநாசி, பொங்கலூர் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர். ஆகஸ்ட் 2ம் தேதி வரை இந்த வகுப்பு நடைபெறுகிறது.
--------------
டி.வி. தொடர் நாடகம் பார்ப்பதற்காக 
பிரசவ பணியில் செவிலியர் அலட்சியம்

இறந்தே பிறந்தது குழந்தை; நடவடிக்கை எடுக்க மக்கள் ஆவேசம்.





திருப்பூர் 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதா நிலையத்தில் ஒரு கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த செவிலியர்கள், டிவி தொடர் நாடகம் பார்ப்பதற்காக, அலட்சியமாக செயல்பட்டதால் வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறந்தது. தாயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் தொடர்புள்ள செவிலியர்கள் மீது துறைரீதியாக கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். கிரில் வேலை செய்யும் தொழிலாளியான இவரது மனைவி எஸ்.சத்தியப்பிரியா (வயது 20). இவர் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்காக கடந்த 20ம் தேதி வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அவ்வப்போது பரிசோதனை செய்ததில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று மாலை 5 மணியளவில் சத்தியப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் பேபி, கமலம்மாள் ஆகியோர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். எனினும் வயிற்றில் குழந்தை மாறி இருப்பதால் பிரசவம் சிக்கலாக இருந்துள்ளது. நீண்ட நேரம் வலியால் சத்தியப்பிரியா கதறித் துடித்துள்ளார். அப்போது உறவினர்கள் பிரசவம் பார்ப்பது சிரமமாக இருந்தால் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று செவிலியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் உறவினர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்காமல் அவர்களே முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இடையில் தொலைகாட்சி நாடகம் பார்ப்பதற்கும் அவர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அறுவை சிகிச்சை செய்து, மருத்துவத்தற்கு சம்பந்தம் இல்லாத பிறரையும் அழைத்து வந்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இந்த அலட்சியமான சிகிச்சை காரணமாக குழந்தை இறந்தே பிறந்துள்ளது. தாய் சத்தியப் பிரியாவுக்கும் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு நாடித்துடிப்பு குறைந்துள்ளது. 
செவிலியர்களின் அலட்சியம் காரணமாக மொத்தம் ஐந்தரை மணி நேரம் இந்த கொடுமை நடைபெற்றுள்ளது. சத்தியப்பிரியா உயிரிக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து சத்தியப்பிரியாவை அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த அரசு மருத்துவர், சத்தியப்பிரியாவின் உறவினர்களை கடுமையாக வசைபாடியுள்ளார். யார் சிகிச்சை அளித்தது, ஆடு மாடுகளை அறுப்பது போல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்" என்று திட்டியிருக்கிறார்.
குழந்தையையும் பறிகொடுத்து, சத்தியப்பிரியாவும் ஆபத்தான கட்டத்தை அடைந்ததால் உறவினர்கள், அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார மக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து வியாழக்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் நகரக்குழ உறுப்பினர்கள் வி.பி.சுப்பிரமணியம், சி.சுப்பிரமணியம் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகி வேல்முருகன் உள்பட பொது மக்கள் வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். 
அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் நடந்த சம்பவம் குறித்து சொல்லி, சம்பந்தப்பட்ட செவிலியர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து மருத்துவத்துறை இணை இயக்குநர், திருப்பூர் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோரிடமும் கோரிக்கை மனுக் கொடுத்தனர்.
பாதிக்கப்பட்ட சத்தியபிரியாவுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பதுடன், இந்த சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தோடு வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நூற்றுக்கணக்கான கர்ப்பிணி தாய்மார்கள் தொடர் சிகிச்சைக்கும், பிரசவத்திற்கும் வரும் சூழ்நிலையில் அந்த சுகாதார நிலையத்தில் 24 மணி நேர மருத்துவமனையாக மாற்றி தேவையான மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஓரிரு நாளில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்களைத் திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

0 comments: