Sunday, July 20, 2014

On Sunday, July 20, 2014 by TAMIL NEWS TV in , , ,    


பெருந்துறை
சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.
237 பேருக்கு விலையில்லா ஆடுகள்
சீனாபுரம் மற்றும் திங்களூர் பகுதிகளில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், பெருந்துறை அ.தி.மு.க. செயலாளர் திங்களூர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல இயக்குனர் ஜெயராமன் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி சீனாபுரம் மற்றும் திங்களூர் ஊராட்சிகளை சேர்ந்த 237 பேருக்கு, ரூ.31 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 948 விலையில்லா ஆடுகளை முதல்–அமைச்சர் வழங்க உத்தரவிட்டார்.
ஈரோடு–திங்களூர் பஸ் மீண்டும் இயக்கம்
மேலும் திங்களூர் பகுதியில் ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கால்நடை ஆஸ்பத்திரி, ரூ.7 லட்சம் செலவில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம், 3 படுக்கை வசதிகளுடன் இருந்த திங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 35 படுக்கை வசதியுடன் தரம் உயர்வு, ரூ.1 கோடி செலவில் அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள், திங்களூரில் இருந்து திருப்பூர் மற்றும் பழனிக்கு பஸ் வசதி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்–அமைச்சர் செயல்படுத்தி உள்ளார்.
ஈரோடு–திங்களூர் டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படும். திங்களூர் நால்ரோடு பஸ் நிறுத்தத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நவீன நிழற்குடை ஒன்று விரைவில் அமைத்து தரப்படும். தற்போது வழங்கப்பட்டு உள்ள விலையில்லா ஆடுகளை பயனாளிகள் நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மகளிருக்காக உருவாக்கப்பட்ட திட்டம்
கலெக்டர் சண்முகம் கூறுகையில், ‘‘விலையில்லா ஆடுகள் வழங்கும் தமிழக அரசின் இந்த உன்னத நோக்கம் மகளிருக்காக உருவாக்கப்பட்டது. மகளிரின் பொருளாதாரம் மேம்பட இந்த திட்டம் பெரிதும் உதவும். ஒட்டுமொத்த குடும்பத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது. தனி நபர் நலம், ஒரு குடும்பத்தின் நலம், ஒரு சமூகத்தின் நலம் ஆகியவை நன்கு திகழ ஒரு குடும்ப அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு இந்த திட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரமணியம் (சீனாபுரம்), கீதா வேலாயுதசாமி (திங்களூர்), சோமசுந்தரம் (போலநாய்க்கன்பாளையம்), மோகன்ராஜ் (பாப்பம்பாளையம்), ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனி, ராஜன், ஊராட்சி செயலாளர் செங்கோடு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பிரகாசம் வரவேற்று பேசினார். முடிவில், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தங்கவேல் நன்றி கூறினார்.

0 comments: