Sunday, July 20, 2014

On Sunday, July 20, 2014 by TAMIL NEWS TV in , , ,    
ஈரோடு: மாணவி கடத்தல், ஆயுதங்களால் தாக்கி கொண்ட விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க.,வினரை கைது செய்ய போலீஸார் தயக்கம் காட்டி வருகின்றனர்.ஃபேஸ் புக் மூலம் பழகிய, கல்லூரி மாணவியை, கடத்தி போலி ஆவணங்கள் தயாரித்து, கட்டாய திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், ஈரோடு மாநகராட்சி அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஸ்ரீபிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன், இவ்விவகாரத்தில் ஸ்ரீபிரியாவின் கணவர் அங்கமுத்து, இளம் பெண்ணை திருமணம் செய்த வடிவேலையும், போலீஸார் கைது செய்தனர்.
விசாரணைக்காக ஸ்ரீபிரியா, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இரு தினங்களுக்கு முன் வந்திருந்தார். போலீஸ் விசாரணையை விரைந்து முடித்து, அவரை அனுப்பி வைத்தனர். தற்போது ஸ்ரீபிரியாவை தலைமறைவு நபராக, போலீஸார் கூறியுள்ளனர்.அதுபோல், இரு தினங்களுக்கு முன், பூக்கடை வைக்கும் விவகாரத்தில், மாநகராட்சியின், 45வது வார்டு அ.தி.மு.க., செயலாளரும், மாவட்ட பிரதிநிதியுமான பழனிசாமி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மணிகண்டன், மற்றொரு தரப்பான 57வது வார்டு கவுன்சிலர் பிரபு ஆகியோர் கும்பலாக ஆயுதங்களில் தாக்கி கொண்டனர். இவ்விரு தரப்பினர் மீதும், ஈரோடு டவுன் போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அதன் பின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபை கூட்ட தொடர் நடக்கிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினரை கைது செய்து நடவடிக்கை எடுத்தால், போலீஸ் துறை அமைச்சராக, அ.தி.மு.க., பொது செயலாளராக உள்ள ஜெ.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி விடும். எதிர்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்புவர். அ.தி.மு.க.,வினர் நடவடிக்கை குறித்த மாநில அளவில் விவாதிக்கப்படும். இது அரசுக்கு அவப்பெயரை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதால், அவர்களை கைது செய்யாமல், போலீஸார் நழுவுகின்றனர்.கடந்த சில மாதத்துக்கு முன் நடந்த ஆலை விஷ வாயு கசிவு விவகாரத்தில், ஏழு தொழிலாளர்கள் பலியாகினர். சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு நண்பர், ஆளும் கட்சிக்கு சாதகமானவர் என்பதால் ஆலை உரிமையாளர், ஜாமீன் எடுக்கும் வரை கைது செய்யாமல், போலீஸார் காப்பாற்றினர்.
* இதே போல் மொடக்குறிச்சி அருகே, தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்த விவகாரத்தில், ஆவின் இயக்குனர் அசோக், மீது வழக்குப்பதிவு செய்த பின், வேண்டும் என்றே, கால தாமதப்படுத்தி, ஜாமீன் வாங்கும் வரை, போலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.
* நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன், 46 புதூர் பஞ்., தலைவர் பிரகாஷையும் ஜாமீன் வாங்கும் வரை, தப்ப வைத்தது, போலீஸ் துறை.
அடி, தடியில் சிக்கும் சாமானியர்களை, ஏதும் அறியா அப்பாவிகளை விரைந்து கைது செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும், போலீஸார், அ.தி.மு.க.,வினர் மீது கைவைக்க தயக்கம் காட்டுவது கவலைக்குரியது.
கடத்தல், நில அபகரிப்பு, சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும், சட்டரீதியான நடவடிக்கை பாயாததால், ஈரோடு எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி உட்பட போலீஸார் மீது, மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

0 comments: