Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by farook press in , ,

சென்னையில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினார்கள்.
அப்போது இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 93 பேரையும் அவர்களது 62 படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி வலியுறுத்தினார்கள்.
இந்த சந்திப்பிற்கு பிறகு மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:–
இன்று நமது நாட்டின் பாரம் பரியமான சகோதர சகோதரிகள் உறவை வலுப்படுத்தும் ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது.
பாரதீய ஜனதா மகளிர் அணியினர் ஏற்பாடு செய்து உள்ள இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மீனவ சகோதரர்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான அரசு விரைவில் நிரந்தர தீர்வு காணும். அதற்கான முயற்சிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர் சங்க நிர்வாகி இளங்கோ கூறியதாவது:–
இந்தியா– இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையின்போது கலந்து கொண்ட நிர்வாகிகள் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். அப்போது இலங்கை சிறையில் உள்ள 93 மீனவர்களையும் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள 62 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினோம். இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண எங்களது கோரிக்கைகளையும் தெரிவித்தோம்.
மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு சுமார் 7 முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்க உடனடியாக அரசு மேற் கொண்ட முயற்சியால் உடனுக்குடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளோம்.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பாரதீய ஜனதா தலைவர்களும், மத்திய அரசும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அவர்களது முயற்சி விரைவில் வெற்றி பெறும் என்று நம்புகிறோம்.
மீண்டும் வருகிற 16–ந்தேதி பொன்ராதாகிருஷ்ணனை சந்தித்து மீனவர் பிரச்சினை குறித்து பேச இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமாலாலயத்தில் நடந்த ரக்ஷாபந்தன் விழாவில் பாரதீயஜனதா மகளிர் அணியினர் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், மோகன்ராஜுலு, வானதி சீனிவாசன், சரவண பெருமாள், வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், பிரகாஷ், காளிதாஸ், நிர்வாகிகள் பிரேம்ஆனந்த், பிரேம்நாத், அலங்காரமுத்து, ஜி.கே.எஸ்., மகளிர் அணி நிர்வாகிகள் சரளா, ரமா, லதா, லலிதாமோகன், யோகவள்ளி, வீணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.