Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by farook press in ,

உடுமலை பழனி மெயின்ரோடு நாராயணன் காலனி பகுதியில் வசிப்பவர் லீலாவதி (வயது 65). இவரது கணவர் லட்சுமண செட்டியார் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்களும் 1 மகனும் உள்ளனர். மகள் கிருஷ்ணவேணி அனச்சம் நகரில் வசித்து வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த லீலாவதி வீட்டின் அருகே மீன் கடை நடத்தி வந்தார். கடந்த 2 நாட்களாக லீலாவதியின் நடமாட்டம் வெளியில் இல்லை. அடிக்கடி மகள் வீட்டுக்கு லீலாவதி செல்வார் . கடந்த 2 நாட்களாக அங்கும் அவர் செல்லவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மகள் கிருஷ்ணவேணி நேற்று மாலை லீலாவதியைப் பார்க்க நாராயணன் காலனிக்கு வந்தார். லீலாவதியின் வீடு வெளியில் திறந்து கிடந்தது. தாயை அழைத்தவாறு உள்ளே சென்று கிருஷ்ணவேணி பார்த்த போது அங்கு ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது.
அந்த அறையை தட்டிப்பார்த்து தாயை கிருஷ்ணவேணி அழைத்தார். ஆனால் எந்த பதிலும் லீலாவதியிடமிருந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணவேணி அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தார்.
அங்கு லீலாவதி படுகாயங்களுடன் பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி அலறி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இது பற்றி உடுமலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் தவமணி, வைத்தியலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பூட்டிக் கிடந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே சென்று போலீசார் பார்வையிட்டனர். அப்போது லீலாவதியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு யாரோ அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவரது கழுத்தில் கிடந்த நகையும், காதில் அணிந்திருந்த தோடும் அப்படியே இருந்தது.
எனவே எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது சந்தேகமாக உள்ளது. கடந்த 8–ந் தேதி இரவு வரை லீலாவதியின் நடமாட்டம் வெளியில் இருந்துள்ளது. அதன் பின்னரே அவர் வெளியில் நடமாடவில்லை. எனவே 8–ந் தேதி இரவோ அல்லது நேற்று பகலிலோ இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவருகிறது.
கொள்ளையர்கள் யாராவது இந்த கொலையை செய்திருக்கலாம் என்று நினைத்தால் அதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால் வீட்டில் உள்ள பொருட்களும் லீலாவதி அணிந்திருந்த நகைகளும் கொள்ளை போகவில்லை.
எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதன் பேரில் உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.