Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    

மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஆற்றில் விநாயகர் சிலை கரைக்குமிடத்தில் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 வரும் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மதுரையில் கடந்த ஆண்டு 162 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டன. தற்போது அவ்வமைப்பினர் 180 இடங்களுக்கும் அதிகமாக விநாயகர் திருவுருவச் சிலைகள் வைக்க காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க காவல் துறை அனுமதி தரத் தயங்கிவருகிறது.
 விநாயகர் சிலைகளுக்கு தலா 2 போலீஸார் என சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கவும், சிலை அமைப்புக் குழுவினரும் போலீஸாருடன் சேர்ந்து பாதுகாப்பில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 நகரில், விநாயகர் சிலைகள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு சிவசேனை ஆகியவை சார்பில் நிறுவப்படுவதாக போலீஸார் கூறினர். அதன்படி, 29-ம் தேதி மாலையிலிருந்து விநாயகர் சிலை கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது.
 கீழமாசி வீதி விநாயகர் கோயில் முன்பிருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலமானது தெற்கு, மேல மாசி வீதிகள் வழியாக வடக்குமாசி வீதி வந்து, பழைய சொக்கநாதர் கோயில் வழியாக தைக்கால் தெருவை அடையும்.
  பின்னர், திருமலைராயர் படித்துறை பகுதியில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 சிலைகள் கரைக்கும் இடம் வருவாய்த் துறையினரால் ஆழப்படுத்தப்பட்டு, நீர் நிரம்பியிருக்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
 இதற்கிடையே, இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கே.எம்.பாண்டியன் தலைமையில் மாநகர் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து, விநாயகர் சிலை அமைப்பது குறித்து பேசியுள்ளனர்.
 அப்போது புதிய இடங்களில் சிலை அமைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் குறித்து போலீஸ் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
 நகரில் மாட்டுத்தாவணி, காளவாசல், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் சாலையோரஙக்ளில் இப்போதே சிறிய விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காதிகிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

0 comments: