Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், விடுதிக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் ரூ.25 லட்சம் மாணவர்கள் பாக்கி வைத்ததைத் தொடர்ந்து காலவரையின்றி மூடப்பட்ட வஉசி விடுதி, துணைவேந்தர் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலுள்ள வஉசி விடுதியில் சுமார் 159 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரத்யேகமாக தனி உணவுக் கூடமும் செயல்படுகிறது. இங்கு தங்கியிருந்த மாணவர்களில் 22 பேர் தவிர மற்ற மாணவர்கள் ஓராண்டுக்கும் மேலாக ரூ.25 லட்சம் வரை விடுதிக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர். பல்கலை நிர்வாகத் தரப்பில் பலமுறை நினைவூட்டியும் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் 2 மாதங்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் வீதம் ரூ.7 லட்சம் கொடுத்ததால் விடுதி செயல்பட்டது.
இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்பு பணத்தை செலுத்தாத மாணவர்களில் சிலர் உணவுக் கூடத்தை உடனடியாக திறக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற விடுதிக் காப்பாளர்கள் 2 பேரையும் அவர்கள் சிறை
பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் உதவியுடன் அந்த 2 பேரும் மீட்கப்பட்டதுடன், விடுதியும் காலவரையின்றி மூடப்பட்டது.
விடுதி மாணவர்கள் வேண்டுகோளுக்கிணங்க துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் விடுதி மற்றும் உணவுக் கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுதிக்குழுவினரை கேட்டுக் கொண்டார். இதை ஏற்று, விடுதிக் குழுவினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், விடுதிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்கள் மூன்று தவணைகளாக (இரு மாதத்திற்கு ஒருமுறை) செலுத்தி நிலுவைத் தொகையை நேர் செய்து கொள்ள வேண்டும். மாதந்தோறும் செலுத்த வேண்டிய உணவுக் கட்டணத்தை அறிவிக்கை வெளியிட்ட 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். உணவகம் தொடங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் ரூ.1.2 லட்சத்தை முன்பணமாக தர வேண்டும். (ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக பல்கலைக்கழக விடுதி உணவகத்துக்கு நிர்வாகம் ரூ.9 லட்சம் வழங்கியுள்ளது) என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உத்தரவின் பேரில், வஉசி விடுதி உடனடியாக திறக்கப்பட்டது. விடுதி உணவகம் விரைவில் திறக்கப்படும் என பதிவாளர் நா.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.