Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    
தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற விலையில்லா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தில் மிகவும் முக்கியமான உன்னதமான இடம் வகிப்பது விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலெக்டரின் தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு அந்த ஆடுகளை எப்படி பராமரித்து இனப்பெருக்கம் செய்வது? என்பது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பயனாளிகளின் விருப்பப்படி 6 முதல் 8 மாதம் வயதுள்ள ஆடுகள் சந்தையில் இருந்து வாங்கி தரப்படுகிறது. அந்த ஆடுகள் வாங்கியவுடன் அதற்கு காப்பீடு செய்யப்படுகிறது.
கால்நடை துறைகளின் மூலம் மாதம் ஒரு முறை அரசால் வழங்கப்பட்ட ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, தொடர் சிகிச்சை போன்ற பராமரிப்பு நடவடிக்கை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 147 கிராமங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 932 பயனாளிகளுக்கு ரூ.18 கோடி செலவில் 55 ஆயிரத்து 728 ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆடுகள் இதுவரை 60 ஆயிரத்து 215 குட்டிகள் போட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த விலையில்லா ஆடுகள் பெற்ற பயனாளிகள் பலர் தங்கள் வாழ்வை வளமாக்கி உள்ளனர். இவர்களில் பெருந்துறை அருகே உள்ள கந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் என்ற பெண் கூறியதாவது:–
என் கணவர் பெயர் வெள்ளியங்கிரி. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விவசாய கூலி தொழிலாளர்களான எங்களுக்கு பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பித்தேன். என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 வெள்ளாடுகள் வாங்கினேன். நல்ல முறையில் அதனை வளர்த்து வந்தோம். அந்த ஆடுகள் 60 குட்டிகளை ஈன்றுள்ளது. என் மகளை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வைக்கவும் மற்றும் மகனின் படிப்பு செலவுக்கும் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய கடனை அடைப்பதற்காக 34 ஆடுகளை விற்றேன். இதன் மூலம் எனக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கிடைத்தது. இந்த பணத்தை கொண்டு படிப்பு செலவுக்கு வாங்கிய கடனை அடைந்தேன். மீதி பணத்தை மகளின் திருமணத்துக்கு சேமித்து வைத்துள்ளேன்.
ஆடுகள் மூலம் கிடைத்த வருமானத்தில் என் மகள் என்ஜினீயரிங் முடித்து இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாள். இத் திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு நன்றியை காணிக்கையாக்கி கொள்கிறேன்.
இவ்வாறு நல்லம்மாள் கூறினார்.
அதே பகுதியை சேர்ந்த குமுதா என்ற பெண் கூறியதாவது:–
விலையில்லா ஆடுகள் திட்டத்தின் மூலம் 4 ஆடுகள் பெற்றேன். இதுவரை இந்த ஆடுகள் 57 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் 34 ஆடுகளை விற்று என் ஊரிலேயே ரூ.1½ லட்சம் மதிப்பில் 4 சென்ட் நிலம் வாங்கி உள்ளேன்.
என் வாழ்நாள் கனவான சொந்த இடம் வாங்குவதை இத்திட்டம் மூலம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். 

0 comments: