Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,


மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.தேரோட்டத்தையொட்டி தேருக்கு வண்ண வண்ண மலர்களாலும், வண்ண வண்ண துணிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 4 மணியளவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேருக்கு எழுந்தருளினார். தேரில் சிறப்பு பூஜைகள் தீபாராதணைகள் நடைபெற்றன.காலை 8.45 மணிக்கு அழகர்கோவில் தக்கார் வி.ஆர்.வெங்கடாஜலம், துணை ஆணையர் வரதராஜன், இளைய ஜமீன்தார் ,பி ஆர் ஓ சிவராஜன் ஆகியோர் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர். அதை தொடாந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது “கோவிந்தா கோவிந்தா” என்று பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி இழுத்துச்சென்றனர். ஏராளமான பக்தர்கள் தீப்பந்தங்களை ஏந்தி அழகரை பற்றி புகழ் பாடி தேருக்கு முன் சென்றனர்.தேர் ஓடும் வீதி முழுவதும் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்ததால் தேர் கோட்டை வாசல் உள் பிரகாரம் வழியாக வலம் வந்து 11 மணியளவில் தேர் நிலையை வந்து அடைந்தது. அதன் பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதணையும் நடைபெற்றது. தேரோட்டததை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அழகர் கோவில் பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.மதுரை கள்ளழகர் கோவில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இந்த தலமானது ஆழ்வார்களால் பாடப்பெற்ற புகழ் வாய்ந்த கோவிலாகும்.இயற்கை எழில் சூழ்ந்த அழகர் மலை அடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்றாலும் ஆடிப்பெருந்திருவிழா என்பது சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இத்திருவிழாவின் சிகரமாக தேர் திருவிழா நடக்கிறது.இத்தகைய பிரசித்தி பெற்ற ஆடிப்பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு மாவிலை, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜபெருமாள் கொடிமரம் அருகே சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி மேளதாளத்துடன் கொடி ஏற்றப்பட்டது. அன்றிலிருந்து தினசரி சுந்தரராஜ பெருமாள் அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமார்வாகனம், கருடவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவந்தார் அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் காலை நடைபெற்றது. தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டும் அல்லது பிற மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கார்களிலும், மோட்டடார் சைக்கிள்களிலும் அழகர் கோவிலை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். கிராம பகுதி மக்கள் மாட்டு வண்டிகளிலும் அழகர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கு வசதிகளாக இரவு முழுவதும் பெரியார் பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன