Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
வாடிப்பட்டியில் அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிக்கலின்றி மருத்துவமனையில் சேர போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மருத்துவமனையும் மேம்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி வளர்ந்துவரும் நகர். இங்கு நீதிமன்றம், தாலுகா, ஒன்றிய, பேரூராட்சி அலுவலகங்களும், காவல் நிலையம், பத்திரப் பதிவு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்பட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இதனால் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான வெளியூர்க்காரர்களும் வந்து செல்கின்றனர்.
தேசிய நான்கு வழிச்சாலையும் உள்ளதால், வாடிப்பட்டி பகுதியைப் பயன்படுத்துவரோர் எண்ணிக்கை பன்மடங்காகிவிட்டது. மக்கள் புழக்கம் அதிகரித்த நிலையில், அதற்கேற்ப விபத்துகளும், பிரச்னைகளும் அதிகரித்துவருகின்றன.
வாடிப்பட்டி பகுதியில் அதிகரித்துள்ள விபத்தில் காயமடைவோரும், கிராமப்புறங்களில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்படுவோரும் சிகிச்சை பெறத்தக்க இடம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைதான்.
வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டு மக்களும், ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 23 ஊராட்சி மக்களும் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். இம் மருத்துவமனையானது வாடிப்பட்டி பஸ் நிலையத்தின் பின்பகுதியில் அமைந்துள்ளது.
சிகிச்சைக்கு வருவோருக்கு வசதியாக போக்குவரத்து வசதியுள்ள பஸ் நிலையம் அருகே மருத்துவமனை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அமைப்பே தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பஸ் நிலையத்துக்குள் வரும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளின்படி நிறுத்தப்படுவதில்லை. பஸ் நிலையத்தின் வாயில் பகுதியிலும், பக்கவாட்டிலும், சாலையோரங்களிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால், மருத்துவமனைக்கு வரும் அவசர ஆம்புலன்ஸýகள்கூட நெரிசலில் சிக்கி பல மணி நேரம் தாமதத்துக்கு பிறகே மருத்துவமனைக்குள் செல்லும் அவலநிலையே உள்ளது. பஸ் நிலையப் பகுதியில் கடைகள் எனும் பெயரில் சாலையோர ஆக்கிரமிப்பும் அதிகரித்துவிட்டது. ஆனால், சட்டம், ஒழுங்கில் மட்டுமே கவனம் செலுத்தும் போலீஸார் போக்குவரத்தை சீர்படுத்துவதில் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
மிகுந்த சிரமத்துக்கு இடையே மருத்துவமனைக்குள் சென்றாலும், போதிய படுக்கை வசதிகள் இல்லை. ஆகவே மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப 30 உள்நோயாளிகள் படுக்கையை கூடுதலாக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை. பிரசவ வார்டில் 15 படுக்கைகளே உள்ளன. இதனால் கூடுதலாக வரும் கர்ப்பிணிகள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை உள்ளது.
விபத்துகளில் இறப்போரின் பிரேதத்தை பரிசோதனை மேற்கொள்வதற்கு போதிய வசதிகளும் இல்லை. ஆகவே, பிரேதங்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதும் வாடிக்கையாகிவிட்டது. வாடிப்பட்டியானது மதுரை மாவட்டத்தில் வளர்ந்துவரும் பேரூராட்சியாக உள்ளது. ஆகவே, மக்கள் தேவையைக் கருத்தில்கொண்டு அத்யாவசியமான போக்குவரத்தையும், உடல் நலத்தை பேணும் மருத்துவமனையையும் மேம்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கை.