Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மதுரை: விமான நிலையத்தில் எபோலா நோய் பாதிப்பை கண்டறியும் மருத்துவக்குழுக்கள்
ஆப்பிரிக்க நாட்டில் தற்போது புதுவகை நோயான ‘எபோலா’ என்ற கொடிய நோய் பரவி வருகிறது. இந்நோயால் பலர் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் அந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். ‘எபோலா’ நோய்க்கு பயந்து நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் மூலம் நம் நாட்டிலும் நோய் பரவி விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய–மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்திலும் ‘எபோலா’ வைரஸ் நோய் பாதிப்பை கண்டறியும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் பயணிகள் அனைவரையும் இச்சோதனை குழு பரிசோதனை செய்து வருகிறது.
இக்குழுவில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர், சுகாதார ஆய்வாளர் உள்ளனர். இக்குழு சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘எபோலா’ நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 4 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை துபாயில் இருந்து மதுரை வந்த ஜெட் விமானத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் இருந்து 3 பேர் வந்ததாக டாக்டர் குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் பற்றி விசாரணை நடத்தியதில் டவ்லோ டிவைன் அமி (வயது45) என்பவர் தனது மகள்கள் டிபென்ட்ரி ஐராம் போபி (6), அன்ட்ரி எமிபா அப்லா (3) ஆகியோருடன் மதுரை வந்தது தெரியவந்தது.
டவ்லோ டிவைன் அமி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள பள்ளியில் படித்து வந்ததால் அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மகள்களுடன் வந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அவர்கள் 3 பேரையும் பரிசோதனை செய்து பார்த்தனர். அவர்களுக்கு ‘எபோலா’ வைரஸ் தாக்குதல் இல்லை என தெரியவந்ததும் கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.