Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள பொட்டபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது50). இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கொசவபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்குள்ள வளைவில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி லட்சுமி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
பலத்த காயம் அடைந்த லட்சுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதுபற்றிய தகவல் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.
இரவு 7 மணி அளவில் லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய முயன்றனர்.
அப்போது இறந்து விட்டதாக கருதப்பட்ட லட்சுமி திடீர் என்று கண் விழித்தார். இதை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது உடலில் உயிர் இருப்பது தெரியவந்தது. உடனே அவசர, அவசரமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் இறந்ததாக கூறப்பட்ட லட்சுமி உயிருடன் இருக்கும் தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதை கேட்டதும் அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த தகவல் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: