Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in ,    

குரங்கிலிருந்து பெறப்பட்ட உலகில் சிறந்த பரிணாமம் தான் மனிதன், மனிதனாகிய நாம் வாழ்வில் பல பருவ-பரிணாமங்களை அடைகிறோம், அதில் வாழ்க்கை அனுபவமும்,முதுமையும் முழுமைப்பெற்ற பருவம் தான் “முதிர்ப்பருவம்”. நீண்ட வருடங்களுக்கு பிறகு என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன் என் வருகையை எதிர்பாராத அவர் வீட்டின் வாசல் கதவு பூட்டிருந்தது, நண்பரின் அலைபேசிக்கு தொடர்புக்கொண்டு கேட்ட போது தாம் வெளியில் இருப்பதாகவும் நீங்கள் பக்கத்து வீட்டில் அமருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என்றார் மகிழ்ச்சியுடன். பக்கத்து வீட்டு திண்ணை சுவரின் மூலையில் சாய்ந்தவாறு ஒரு வயதான அம்மா இருந்தார். அந்த வீட்டுகாரரிடம் அனுமதி பெற்று திண்ணையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.அவர் பார்ப்பதற்கு உடல் ஆரோக்கியம் குன்றிய தோற்றத்தில் இருந்தார். அவர் அருகில் உறங்குவதற்கு பழைய துணிகளை அடைத்து தயார் செய்த ஒரு தலையணையும், நூல்கள் பிரிந்த கோரைப்பாய் ஒன்றும் மட்டுமே இருப்பதை காணமுடிந்தது. அவரை பார்த்தவுடன் என்னை அறியாமலேயே எப்படி இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன செய்கிறது என்று வினவினேன். அவரோ சற்று மங்கிய கண்ணொளியில் சுருங்கிய கண் இமைகளின் மூலம் பார்த்தார், என்னை பார்த்தவுடன் அவரது முதிர்ந்த கண்ணோரங்களில் கண்ணீர் பொழிந்தது, நான் பயந்து விட்டேன் “ஏனம்மா என்ன ஆயிற்று நான் ஏதாவது தவறாக கேட்டேனா?” என்றேன். அதற்கு அவர் “நீங்கள் யார் என்றே தெரியாது இருப்பினும் உங்கள் கனிவான வார்த்தை என்னை உணர்ச்சிவசத்தை ஏற்படுத்திவிட்டது” என்றார். மேலும் “நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று என் மகன்களே என்னை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். நீங்கள் என்னை கேட்ட அந்த கனிவான வார்த்தையை என் மகன்கள் கேட்டிருந்தால் இப்போது நீங்கள் என்னை கேட்டிருக்க வாய்பிருக்காது” என்றார். (அவருடைய சொற்களில் அன்பின் ஏக்கமும்,பிள்ளைகளின் உறவில் பாசமின்றி தவிக்கும் பரிதாபமும் புரிந்தது). மேலும் அவர் இந்த நிலைமைக்கு வந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தார் : அவர் கணவர் உடல்நல குறைவால் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும், கணவரின் மாத ஓய்வூதியத்தையும், சிறு இட்லிக்கடை வியாபாரத்தையும் மட்டுமே நம்பி தற்போது உயிர் வாழ்வதாகவும், மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆன பின்பு வெளியூரில் குடும்பத்துடன் வசிப்பதாகவும், மகன்கள் வீட்டில் மாதம் மாதம் மாறி வாழ்வதை பிடிக்காததாலும் , நகர வாழ்க்கை பழக பிடிக்காததாலும், இப்போது சொந்த ஊரில் வீட்டிலேயே இட்லிக்கடை ஒன்றை நடத்தி வருவதாகவும், தற்போது உடல் நலக் குறைவால் வாழ்க்கை நிறைவு பெறும் தினத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் எனவும் கூறினார் சோகத்துடன். மேலும் வெளியூரில் வாழும் இரு மருமகள்களும் என்னுடன் சேர்ந்து வாழ பிடிக்காத காரணத்தால் தன்னுடைய மகன்கள் மட்டும் எப்போதாவது பேரப்பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்துபோவதாக ஏக்கத்துடன் கூறினார். (துணைவரை இழந்து இரத்த சோகையாலும்,ஆஸ்துமாவலும் பாதிப்படைந்த இந்த வயதான காலத்திலும் இட்லிக்கடை வைத்து பிழைத்துக்கொண்டு அவதிப்படும் அந்த அம்மாளுக்கு இரண்டு மகன்கள், மருமகள்கள் என உறவுகள் இருந்தும் அவரை பராமரிக்க ஒருவரும் இல்லை என்பதை அவருடைய சோக குமுறலின் மூலம் அறிந்தவுடன், எனக்கு இதுபோன்ற ஒரு பாட்டி இல்லையே என்ற ஏக்கமும் மனத்திலுள்ள ஏக்கமும் சேர்ந்து என் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது). என் நண்பரும் வந்துவிட்டார், நான் பிரிய மனமின்றி பத்மா அம்மாவிடம் கவலைப்படாதிர்கள் நான் உங்கள் பேரப்பிள்ளையாக என்றும் இருப்பேன். இனி நல்லதே நடக்கும் என்று நம்புவோம் என்று என்னால் முடிந்த அன்பான வார்த்தைகளை சொல்லிவிட்டு விடைப்பெற்றேன்! நாகரிகமான வாழ்க்கையிலும் ஏன் இந்நிலை முதியவர்கள் மனத்தில் காயங்கள் உண்டாக்கும் கரும்புள்ளிகளாக எது உள்ளது? ஒவ்வொருவருக்கும் தன்னுடைய “தாய்” தான் முதல் தெய்வம். “கருவறையில் சுமந்து, மறுப்பிறவி எடுத்து, நம்மை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்யும் தேவதை தெய்வமேயன்றி வேரெவர்??” “நமக்கும் ஒருநாள் முதுமை வரும் பூமியதன் வாழ்நாளை பார்க்கும் போது நம் வாழ்க்கை சில வினாடிகளே” என்ற எண்ணம் ஏன் பொறுப்பில்லாத மகன்களுக்கு வராமல் போகிறதோ!!. மேலைநாடுகளில் ஒரு குடும்பத்தில் 18 வயது தாண்டியவுடன் யார் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் நம் பண்பாட்டில் ஆண் மக்களே தங்கள் குடும்ப உறவுகளான தாய்-தந்தை முதல், மனைவி, குழந்தைகள், தாத்தா-பாட்டி வரை பாதுகாத்து குடும்ப உறவை சிறப்பிப்பது தார்மீக கடமையாக உள்ளது. இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இக்கடமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தேவிட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், கூட்டுக் குடும்பங்கள் சிதறி, நகரத்தை நோக்கி, “குடும்பம்” என்ற நிலை “கணவன் – மனைவி” என்ற குறுகிய வட்டத்தில் அடங்கிவிட்டது. மேலும் அவர்களது குடும்ப உறவுகளில் குழந்தைகள் மட்டுமே சேருகின்றன.அந்த “கணவன் – மனைவி” குடும்பத்தில் அவர்களது பெற்றோர்கள் சேர்க்கப்படாமல் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம்.. கணவன், அவன் மனைவி சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும், மனைவியையும் குழந்தைகளையும் மட்டும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற என்னமும் தான் முதலில் உள்ளது. (சுருக்கமாக நமது நடையில் சொல்லவேண்டும் என்றால் “மாமியார்-மருமகள் பிரச்சினை” வந்து விடுகிறது). இதில் வேறு சில தனிப்பட்ட பிரச்சனைகளும் அடங்கும். இதிலும் சில பிள்ளைகள் தனக்கென மனைவி,மக்கள் வந்தவுடன் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து பெரும் கடமையை நிறைவேற்றியதாக எண்ணுவது மடமை. இவர்களுக்கும் முதுமை வரும் அப்போது தன் பிள்ளைகளும் தம்மை அதுபோன்ற முதியோர் இல்லத்திற்கு அனுப்பமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? மேலும் குடும்ப உறவில் கசப்படைந்து “முதியோர் இல்லம்” நோக்கி செல்லும் நம் பெற்றோர்களையும் அங்கு போகவிடாமல் அன்பு,பாசம் அளித்து அவர்கள் மனம் கோணாமல் நடப்பதில் முயற்சி செய்யவேண்டும். “வாழ்க்கை என்பது ஒரு வட்டம்” என்பதற்கு பொருளாய் குழந்தையாகப் பிறந்து,வளர்ந்த மனிதன் தன் பெற்றோரின் நிலையைத்தான் முதுமையிலும் அடைகிறான். (கருவில் வளைந்து,வெளியில் நிமிர்ந்து, நடந்து வாழ்பவன் முதுமையை அடைந்தவுடன் மீண்டும் முதிர்ந்து,வளைந்து அதே ஆரம்ப நிலையை தான் அடைகிறான்). முதியவர்களின் வாழ்க்கை-அனுபவங்கள், வாழ்வியலில் Phd படிப்பு படித்தோர்க்கும் பாதியளவுக்கூட கிடைப்பதில்லை என்பது அனுபவ மனிதர்களின் ஒப்புதல். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில்தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது” எனக் கூறுகிறார்கள். பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளும், பிள்ளைகளால் ஒதுக்கப்படும் பெற்றோர்களும் அனாதைகளே!! எனவே வாசம் வீசும் முதிர்பூக்களான நம் பெற்றோர்களை என்றும் வாடாமல், மதித்து “குடும்பம்” என்னும் தோட்டத்தில் வாழ்நாள் முழுவதும் வைத்துக்கொள்ள வேண்டும். - 

0 comments: