Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை முதல் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
 ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: