Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி அருகே 2 இடங்களில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் பிச்சைராமன் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், மாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ரோந்துப்பணி

இந்த குழுவினர் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை வட்டம் உடையாண்டஅள்ளி அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் கேட்பாரற்று 15 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் இந்த ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கு கடத்த வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல் ஒப்பதவாடி கூட் ரோடு அருகில் சாலையோரம் 14 மூட்டைகளில் ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதுவிசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 இடங்களில் இருந்தும் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றி, கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதன் மொத்த எடை 1½ டன் ஆகும். மேலும் இந்த ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

0 comments: