Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
திருச்சி மாநகரில் பெண்களிடம் சங்கிலி பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9½ பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்களிடம் சங்கிலி பறிப்பு 

திருச்சி மாநகரில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால் சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் அருள்அமரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குட்ஷெட் மேம்பாலம் அருகே நேற்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

3 வாலிபர்கள் கைது 

அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள், பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்த பிரின்ஸ் (வயது 26), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ரெமி (26), வடிவேல் (30) என்பதும், இவர்கள் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும், தங்க சங்கிலிகளை பறித்து சென்று அதனை விற்ற பணத்தில் 3 பேரும் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இதையடுத்து இவர்களிடம் இருந்து 9½ பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.

0 comments: