Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
ஆளில்லாத ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டதை கண்டித்து அந்த வழியை பயன்படுத்திய பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திடீர் மறியல்
அரக்கோணம் அருகே திருத்தணி ரெயில் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் டி.புதூர்மேடு பகுதிகளை இணைக்கும் ரெயில் பாதையை இணைக்கும் இடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் அந்த கேட்டை நிர்வாக காரணங்களுக்காக ரெயில்வே நிர்வாகத்தினர் மூடி விட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் திருத்தணியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த ரெயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
‘‘நாங்கள் செல்வதற்கு வேறு வழி கிடையாது. ரெயில்பாதைக்கு கீழே இருக்கும் சிறிய சுரங்கப்பாதை பகுதியில் மழை பெய்து தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக நாங்கள் செல்ல முடியாது. எனவே கேட்டை திறந்து விடுங்கள்’’ என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி மற்றும் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன், ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன் பின்னர் மறியல் செய்தவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். விரைவில் ரெயில்வே கேட்டை திறப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட வேண்டிய மின்சார ரெயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மறியல் தொடர்பாக 10 பெண்கள், 30 ஆண்கள் மீது அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments: