Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ம.தி.மு.க.வும் அறிவித்துள்ளது.
ம.தி.மு.க உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி மன்றங்களின் இடைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சிங்கள ராணுவத்தை ஏவி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சே இனக்கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார்.
2009 போரின் இறுதிக் கட்டத்தில் எண்ணிலடங்காத தமிழர்கள் படுகொலை உள்ளிட்ட சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தபோதிலும், அந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஆணவத்தோடு அறிவித்து, ஐ.நா.மன்றத்தின் மதிப்புக்கே பங்கம் விளைவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தின் பொதுச்சபையில் செப்டம்பர் 25 ஆம் தேதி உரையாற்ற அழைப்பு விடுத்திருப்பது ஐ.நா.வின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிவிட்டது என்பதால் அதற்குக் கண்டனம் தெரிவித்தும், ராஜபக்சேக்கு வி

டுத்த அழைப்பை திரும்பப் பெறக்கோரியும்,
ஐ.நா.அறிவித்த விசாரணைக் குழுவினரை இந்தியாவுக்கு வர அனுமதித்து, தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் இலங்கை அரசின் இனக்கொலையால் தமிழகத்திற்கு தஞ்சமென வந்த ஈழத் தமிழ் அகதிகள் விசாரணைக் குழுவிடம் அச்சமின்றி வாக்குமூலம் வழங்க உத்தரவாதம் தருகிற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும், அதனைச் செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தும்,
இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமித்துள்ள சிங்கள ராணுவமும், காவல்துறையும் முற்றாக வெளியேற்றப்பட்டு, ஈழத் தமிழர் தாயகத்தில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றி, சிறை முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகத்திலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஐ.நா.வின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில், செப்டம்பர் 9 ஆம் தேதி பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தலைநகர் சென்னையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது” என அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: