Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    




திருப்பூர், : தமிழக அரசு இடம் வழங்கினால், பனியன் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என திருப்பூரில் நேற்று நடந்த ஏற்றுமதியாளர்கள் சங்க வெள்ளிவிழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார்.
திருப்பூர் ஏற்றும தியாளர்கள் சங்க வெள்ளிவிழா ஆண்டு துவக்கவிழா, திருமு ருகன்பூண்டி அருகே உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்து வரவேற்று பேசினார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வர் முன்னிலை வகித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேலு, பா.ஜ.க. ,மாநில தலைவர் தமிழிசை சொளந்தர்ராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், ஏஇபிசி., தலைவர் வீரேந்தர் உப்பல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய நகர்புற வளர்ச்சி வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: தேசிய விடுதலைக்காக 28 வயதில் ஆங்கிலேயர்களிடம் அடிவாங்கி உயிர் நீத்த திருப்பூர் குமரன் வசித்த திருப்பூர் நகரம் மிகவும் பெருமை மிக்க, பிரசித்த பெற்ற இடமாகும். ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் கடுமையாக உழை ப்பதால்தான் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்து, நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 20 சதவீத பங்களிப்பை திருப்பூர் வழங்கி வருகிறது. 
நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சியின் மூலம் வறுமை ஒழிக்கப்பட்டு, பெண்கள் நலன் பாதுகாக்கப்படும். நாடு விடுதலை அடைந்த 67 ஆண்டுகளாகியும் வறுமை, பட்டினி, வீடு இல்லாமை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமைபோன்ற பிரச்னைகள் உள்ளன. 
தனி மனித முன்னேற்றம் என்பதை விட நாட்டோடு இணைந்து முன்னேற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து கொண்டால்தான் நாடும் வீடும் வளம் பெறும். நாடு முன்னேற்றம் அடையும்போது தனி மனிதனும் முன்னேற்றம் பெறுவான். ஒவ்வொருவரையும் முன்னேற்றம் காணச்செய்வதுதான் அரசின் கடமை. 
அதே சமயம் அரசு காப்பாற்றும் என்ற நினைப்பில் தனி மனிதன் உழைக்காமல் இருந்தால் முன்னேற்றம் அடைய முடியாது. பசி தீர்க்க மீன்களை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதுதான் சிறந்தது. இதைத்தான் திருப்பூரில் உள்ள தொழில் முனைவோர்கள் செய்து வருகின்றனர். 
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களை வளர்த்து தங்களின் தொழிலையும் வளர்த்து தாங்களும் வளர்கின்றனர். திறமை, அளவுகோல், வேகம் என ஒவ்வொரு செயலுக்கும் வடிவம் கொடுத்து செயல்படவேண்டும். தமிழக அரசு இடம் வழங்கி ஒத்துழைத்தால் திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார். 
விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், ‘திருப்பூரும் பின்னலாடை தொழிலும்‘ என்ற தலைப்பில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இளம் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளிவிழா மலரை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட, அதை மத்திய ஜவுளி அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் பெற்றுக்கொண்டார்.

0 comments: