Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    








திருப்பூர், : வருவாய் குறைந்ததால் எக்ஸ்பிரஸ் பஸ்கள் அனைத்து ஸ்டாப்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 253 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், சுமார் 1100 பஸ்கள் எல்எஸ்எஸ் என்ற பெயரில் இயக்கப்படுகின்றன. எல்எஸ்எஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.4ம், அதிகபட்சமாக ரூ.13ம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த பஸ்களில் சிலவற்றை எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் இயக்கப்பட்டது. அந்த பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5ம், அதிகபட்சமாக ரூ.18ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் பஸ்கள் குறிப்பிட்ட ஸ்டாப்பிங்குகளில் மட்டுமே நின்று சென்றன.
இதில் தனியார் பஸ்களை ஒப்பிடுகையில், அரசு பஸ்களில் வருவாய் வெகுவாக குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர். குறிப்பாக மக்கள் அதிக அளவில் ஏறும் பஸ் நிறுத்தங்களில், பஸ்களை 5 நிமிடம் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச்செல்ல உத்தரவிடப்பட்டது. முக்கிய நிறுத்தங்களில் அதிகாரிகள் நின்று கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். மேலும் வருவாய் குறைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலையில், குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று சென்றதால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை ஈடுகட்ட கடந்த சில மாதமாக ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
அதேபோல் பஸ் நிறுத்தங்களில், 5 நிமிடங்களுக்கு மேல் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைந்து சென்றுவிடலாம் என்று எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஏறும் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து, பயணிகள் கூறுகையில், சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக, ‘கட்டணம் அதிகம் கொடுத்து ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களில் ஏறினால், சாதாரண பஸ் போல அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி செல்கின்றனர். மேலும் சில நிறுத்தங்களில் வெகு நேரம் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.
‘எக்ஸ்பிரஸ்’ என போட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்துக்கொண்டு ஏமாற்றி வருகின்றனர். சில நேரங்களில் ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்சுக்கு பின்னால் வரும் சாதாரண பஸ்கள் கூட முந்திச்சென்று விடுகின்றன. ஆகவே ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களிலும் சாதாரண பஸ்களைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றனர்.

0 comments: