Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 43). இவர்களது மகன் நந்தகுமார்.
கடந்த 8–ந் தேதி ஈஸ்வரியும் நந்தகுமாரும் ஈஸ்வரியின் தாயை பார்க்க ஆண்டிப்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
போகும் வழியில் மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஓடி கவிழ்ந்தது. இதில் ஈஸ்வரியும், நந்தகுமாரும் தூக்கி வீசப்பட்டனர்.
ஈஸ்வரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நந்தகுமாரும் காயம் அடைந்தார். முதலுதவி சிகிச்சைக்காக ஈஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கே.ஜி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் ஈஸ்வரி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று கே.ஜி. ஆஸ்பத்திரியில் ஈஸ்வரியின் 2 கண்கள், 2 சிறுநீரகம், ஒரு கல்லீரல் ஆகியவற்றை தானமாக பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
அந்த உறுப்புகளில் 2 சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகம் கே.ஜி. ஆஸ்பத்திரிக்கும், இன்னொரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், 2 கண்கள் கோவை சங்கரா மருத்துவமனைக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காலை 6.30 மணிக்கு ஆபரேஷன் மூலம் ஈஸ்வரியின் 2 கண்கள், 2 சிறுநீரகம், ஒரு கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. பின்னர் ஒரு சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளை கே.ஜி. ஆஸ்பத்திரியில் இருந்து கே. எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறுநீரகமும், கல்லீரலும் பாதுகாக்கப்பட்டு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஒரு டாக்டர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. உடல் உறுப்புகள் கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் உதவி கேட்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் 4 சப்–இன்ஸ்பெக்டர்கள், 25 போலீஸ்காரர்கள் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
கே.ஜி. ஆஸ்பத்திரியில் இருந்து கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி வரை உள்ள எல்.ஐ.சி., அண்ணா சிலை, குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி, லட்சுமி மில், நவ இந்தியா, எஸ்ஸோ பங்க், பீளமேடு பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லூரி, பன்மால், ஹோப் காலேஜ், விமான நிலையம் உள்ளிட்ட 12 சிக்னல்கள் உஷார்படுத்தப்பட்டன.
கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் இருந்து கே.ஜி. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. கே.ஜி. ஆஸ்பத்திரி டாக்டர் பக்தவச்சலம் உடல் உறுப்புகளை வழங்க அந்த உறுப்புகளை மருத்துவ குழு ஆம்புலன்சில் ஏற்றியது.
ஆம்புலன்ஸ் தயார் ஆனதும் 12 சிக்னல்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் வாகன இடையூறு இல்லாதவாறு பார்த்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சரியாக காலை 9.42 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கே.ஜி. ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் ஆம்புலன்சுக்கு முன்னும் பின்னும் போலீஸ் வாகனம் சென்றன.
அலாரம் ஒலிக்க 12 சிக்னல்களையும் கடந்து சரியாக 9.50 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை கே.எம்.சி.எச். தலைவர் நல்லா ஜி. பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்.
இதேபோல ஈஸ்வரியின் 2 கண்களும் சங்கரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொடுக்கப்பட்டன. தனது உடல் உறுப்புகளின் தானம் மூலம் ஈஸ்வரி 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

0 comments: