Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
ரிஷிவந்தியம் அருகே பிரபல ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் பிணம்

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலை ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி, பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற் கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் பிணமாக மிதந்த, உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவர் ரவுடி

விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் அருளானந்தபாண்டியன்(வயது 50) என்பதும், பல்வேறு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் அருளானந்தபாண்டியன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்த அருளானந்த பாண்டியனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல, அப்பகுதி முழுவதும் பரவியது. எனவே கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்

இதையடுத்து அருளானந்தபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருளானந்தபாண்டியன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கழுத்தை அறுத்து படு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அருளானந்த பாண்டியன் மீது, நிலத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரை கடந்த 23-9-2009 அன்று கொலை செய்தது, குடிபோதை தகராறில் கடந்த 14-10-2010 அன்று அரியலூர் கிராமத்தை சேர்ந்த புகைப்படகலைஞர் பீட்டர் என்பவரை கொலை செய்தது ஆகிய 2 வழக்குகளும் பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திலும், புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் நகை அடகு கடைக்காரர் சீனுவாசனை கடத்த முயன்ற வழக்கும், மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 7 வழக்குகளும், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

காரணம் என்ன?

மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசாரால் கடந்த 18-11-2009 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அருளானந்தபாண்டியன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

எனவே அவரது செயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அருளானந்த பாண்டியனின் தலையில் தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளானந்த பாண்டியனை கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருளானந்தபாண்டியனுக்கு மீரா(45) என்ற மனைவியும், சிந்துஜா(21) என்ற மகளும், கார்த்தி(19) என்ற மகனும் உள்ளனர்.

0 comments: