Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்பமுடியாது என்றும், கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மாண்டலின் சீனிவாஸ் மரணம்

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நேற்று) உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

மாண்டலின் என்ற இசைக்கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் சீனிவாஸ். இசைக்குடும்பத்தில் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக்கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச்செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர்.

யாராலும் நிரப்பமுடியாது

மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, “சங்கீத ரத்னா” உள்பட பல விருதுகளைப்பெற்றவர் மாண்டலின் சீனிவாஸ். மாண்டலின் சீனிவாசின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவர் விட்டுச்சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்பமுடியாது.

மாண்டலின் சீனிவாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: