Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை, அன்பகம், அண்ணா மன்றத்தில் தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணைச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஈ.ஜி.சுகவனம், ஆர்.ராசேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா, இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:–
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்குபெறும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி கவிதை ஒப்பித்தல் போட்டி ஆகிய போட்டிகளை மாவட்ட அளவிலும், அதனையடுத்து மாநில அளவிலும் நடத்தி, முறையாக தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்க்கு பரிசுத் தொகையும், சான்றிதழும் கடந்த ஆறு ஆண்டுகளாக தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 7–வது ஆண்டாக இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் 106வது ஆண்டு பிறந்தநாளினை கொண்டாடிடும் வகையில் மாவட்ட அளவிலான முதல் நிலைப் போட்டிகளை அக்டோபர் 11, 12 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் முதல் கட்டமாகவும், அக்டோபர் 18, 19 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் நடத்திடுவதோடு, மாநில அளவிலான போட்டிகளை அக்டோபர் 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
முல்லை பெரியாறு அணையில் 1979ஆம் ஆண்டு 152 அடியிலிருந்து 136 அடி என்கிற அளவிற்கு தண்ணீரை குறைத்து தேக்குவோம் என்று, அ.தி.மு.க. அரசு எழுதிக் கொடுத்ததை மாற்றிட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் தலைவர் கலைஞர். இதன் விளைவாக தற்போது 142 அடிக்கு நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கு காரணம் தலைவர் கலைஞர் தான் என்பதையும் நாட்டுமக்கள் மறந்திடவில்லை. ஆகவே, தமிழக மக்களின் ஊனோடும் உணர்வோடும் கலந்த தலைவர் கலைஞரை தமிழக மக்களின் சார்பில் இக்கூட்டம் நன்றியுணர்வோடு பாராட்டுகிறது.
நீதிமன்ற உத்தரவை ஜெயலலிதா அரசு தாமதமின்றி நிறைவேற்றி, மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும் என கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
விவசாயிகளுக்கு தாராளமாக மானிய விலையில் உரங்கள் கிடைக்க வழிவகை செய்யவும், விவசாய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யவும், தேவையான அளவு பயிர்கடன்கள் வழங்கிடவும் இயலாத அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆட்சியில் நிலவும் நிர்வாகச் சீர்கேடு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலை உயர்வு உள்ளிட்ட மக்களின் வாடி நவாதாரப் பிரச்சினைகளை முன்னிருத்தி; தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதோடு, திண்ணைப் பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம் என பல்வேறு வகைகளில் வியூகம் அமைத்து பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்புக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சிற்றரசு, துணை அமைப்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

0 comments: