Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    



உடுமலை,: பிஏபி இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் 94 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3.105 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது தொடர்ந்து பெய்த பருவமழையால் நீர் வரத்து அதிகரித்து அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. அதேசமயம் கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பரம்பிக் குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் 60 அடி கொண்ட திருமூர்த்தி அணையின் தற்போதைய நீர்மட்டம் 56 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில் திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் இன்று (10ம் தேதி) காலை 9 முதல் 10 மணிக்குள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கால்வாய் நெடுகிலும் புதர்கள் மண்டி கிடப்பதால் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேருமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

0 comments: