Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    


 



திருப்பூர், : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
 உடுமலைபேட்டையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி லீலாவதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார், லீலாவதிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஓட்டல் தொழிலாளி சந்திரா என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அந்த பெண்ணை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக 5 நாட்களாக தனியாக அடைத்து வைத்து போலீசார் சித்ரவதை செய்திருக்கின்றனர் என்ற விவரம் தற்போது சென்னை உயர் நீதிமன்ற விசாரணை மூலம் வெளிவந்திருக்கிறது. போலீசார் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியும், தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அடித்தும், நகக்கண்களில் ஊசியை குத்தியும் கொடுமைப்படுத்தியதாக அவரது மகள் ராஜகுமாரி நீதிமன்றத்தில் கொடுத்துள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
காவல்துறையின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விசாரணைக்காக ஒருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றால் அது குறித்து அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்களை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் தங்க வைக்கக்கூடாது, கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை தமிழக காவல்துறை துளிகூட மதிப்பதில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த மாவட்ட காவல்துறை மூலம் மேற்கண்ட சம்பவத்தை விசாரணை செய்தால் உண்மைச் சம்பவம் வெளிவராது. மேலும் சந்திராவின் குடும்பத்தாரிடம் சமரசம் பேசியும், மிரட்டியும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு தவறிழைத்த காவலர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

0 comments: