Thursday, September 18, 2014
இந்தி திணிப்பு குறித்து தி.மு.க. இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாகவும், கனிமொழிக்காக தமிழ்மொழியை திரு.கருணாநிதி அடமானம் வைத்துள்ளார் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது அம்மொழி திணிக்கப்பட்டால், அதனை எதிர்த்து முறியடிக்க அ.இ.அ.தி.மு.க. உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானிய குழுவின் சுற்றறிக்கை தமிழகத்திற்கு அறவே பொருந்தாது என்றும் முதலமைச்சர் உறுதிப்பட கூறியுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க. சார்பில் திரு. டி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்- இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் கடந்த 16-ம் தேதி கிடைக்கப் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும் போது, அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30-வது கூட்டம் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அன்றைய பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றதும், அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் அல்லது இந்தி படித்து பட்டம் பெறுகின்றனர் என்றும், இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாட்டிற்கு தேவையான மொழி பெயர்க்கும் திறன் அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்து; குஜராத்தில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் படிப்பதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளின்படி, சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி எடுத்த முடிவுகள் தான் என்பது தெரிய வருகிறது. அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்த போது வாய் திறக்காத தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி, தற்போது திரு. டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது, “இந்தி மொழி” பற்றி கூறினால் “கனிமொழி” ஜாமீனில் வெளிவர முடியாது என்று பயந்து வாய்மூடி மவுனியாக இருந்தவர், இன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டைத் தான் எடுத்துக் காட்டுகிறது – இதிலிருந்து, கனிமொழிக்காக தமிழ் மொழியை திரு. கருணாநிதி அடமானம் வைத்தது அம்பலமாகி உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தில், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்த வரையில், மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட 1976-ம் ஆண்டைய, மத்திய அரசின் அலுவலகப் பயன்பாட்டுக்கான அலுவல் மொழிகள் விதிகளின்படி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் “மண்டலம் B” என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. “மண்டலம் B”-ன் கீழ் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் சாதாரணமாக இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அத்துடன் இந்தி மொழி பெயர்ப்பும் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் “மண்டலம் C” என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. “மண்டலம் C”-ன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது – எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கற்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கும் புறம்பானது ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும் என்பதையும்; கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் இருந்து காலேஜ் ரோடு வழியாக ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே ரோட்டோரம் விய...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment