Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள்.
வெற்றிக்கனியை பறித்து விடவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர். தேர்தல் பிரசாரம் 15–ந் தேதி மாலையுடன் ஓய்ந்தது. அதன் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்காக 100 வார்டுகளிலும் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 236 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு யூனியன் 12–வது வார்டுக்கும், சூலூர் யூனியனில் 7 மற்றும் 12–வது வார்டுக்கும், சூலூர், இருகூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், கோட்டூர் பேரூராட்சி 10–வது வார்டு, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி 9–வது வார்டு, எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி 3–வது வார்டுக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது. அங்கும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
ஊராட்சி அமைப்புகளில் பில்சின்னாம்பாளையம் 6–வது வார்டு, கோமங்கலம் 6–வது வார்டு, கரியாஞ்செட்டி பாளையம் 2–வதுவார்டு, சூலக்கல் 3–வது வார்டு, தேவனாம் பாளையம் 8–வது வார்டு, பெத்தநாயக்கனூர் 9–வது வார்டு, வடக்கலூர் 7–வது வார்டு, காளம் பாளையம் 3–வது வார்டு, பெத்தநாயக்கனூர் 7–வது வார்டுகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு 72 பேர் களத்தில் உள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் 22 மற்றும் 45–வது வார்டுகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
அவினாசி யூனியன் 16–வது வார்டு, உடுமலை யூனியன் 6–வது வார்டு, பல்லடம் யூனியன் 10–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பல்லடம் நகராட்சி 6–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர், மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், தளி பேரூராட்சி 5–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகிறார்கள்.3 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 14 பேரும், 9 பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 19 பேரும் களத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 14 காலியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 11 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள கூடலூர் யூனியன் 3–வது வார்டு கவுன்சிலர் பதவி, கீழ்குந்தா பேருராட்சி 1–வது வார்டு கவுன்சிலர் பதவி, 7–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது.

0 comments: