Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in , , ,    
ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, ரஜினி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் சங்கர், படத்தின் நாயகன் விக்ரம் கலந்து கொண்டனர். இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
        
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டு படத்தின் நாயகன் விக்ரமை பாராட்டினார். விழாவில் அவர் பேசியதாவது,“நிச்சயமாக 
இந்தவிழா ஒரு இசை வெளிட்டு விழாவைப் போல இல்லாமல், ஒரு வெள்ளிவிழா போல நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.



ஷங்கர் சினிமாவில் 20 ஆண்டுகளாக பயணம் செய்கிறார். அவரின் முதல் படத்திலிருந்து அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் மேலே மேலே தான் சென்றுகொண்டிருக்கிறார். இந்த ஐ படம், அவர் இதுவரை இயக்கிய படங்களில் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. இதற்கு மேல் அடுத்த படியாக அவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. இன்னும் அவரிடம் நிறைய இருக்கிறது. அவர் விரைவில் இந்தப் படத்தை வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.  

ஹாலிவுட்டில் பல விஷயங்கள் செய்கிறார்கள், நம்மிடம் திறமைசாலிகள் இல்லையா? ஏன் நாம் தமிழ் சினிமாவில் அதை செய்யக்கூடாது என்று நினைத்து, பல முயற்சிகளை செய்கிறார். தமிழ் சினிமாவை, இந்திய சினிமாவை ஹாலிவுட் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார் ஷங்கர். பணம், நேரம் இதை எல்லாம் பார்க்காமல் உழைக்கும் உண்மையான சினிமா இந்தியன் அவர் தான்.

அவருக்கு பக்கபலமாக நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இருக்கிறார். ரகுமான் அவர் தாயாரிடம் சென்று,‘எந்த ட்யூன் போட்டாலும் ஷங்கர் வேண்டாம் என்கிறார்’ என்று சொல்லி அழுததாக நான் கேள்விப்பட்டேன். அந்த அளவுக்கு ஷங்கர் அவரிடம் வேலை வாங்குவார் என்று எனக்கு தெரியும்.  

இந்த படத்தின் நாயகன் சீயான் விக்ரம். ‘ஓ போடு’ சீயான், இனி ‘ஐ’ சீயான் என அழைக்கப்படுவார். தன் உடலை வருத்திக்கொள்ளும் ஒரு நடிகர் அவர். விக்ரமைப் போல கதைக்காக தன்னையே தியாகம் செய்யும் நடிகர், தமிழில் இல்லை, இந்தியாவில் இல்லை, ஹாலிவுட்டில் இல்லை, ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு சீனியர் நடிகன் என்ற முறையில் விக்ரமை என் இதயத்தில் இருந்து பாராட்டுகிறேன்.

‘ஷங்கர் - விக்ரம்’ இந்த காம்பினேஷன் தொடர்ந்து பல படங்களைக் கொடுக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” இவ்வாறு ரஜினி பேசினார். 
ஷங்கரிடம் வாய்ப்பு கேட்ட அர்னால்டு!

பலு தூக்கும் வீரர்கள் சாகசங்களை செய்யும் நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும், இருக்கையை விட்டு எழுந்து உற்சாகமாய் வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, அவர்களை வாழ்த்தினார். அவர்களுடன் மேடைக்கு வந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது என் இளமைக்காலங்கள் எனக்கு ஞாபகம் வருகிறது. இங்கு வந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் ஷங்கர் என்னை வியக்க வைக்கிறார். அவரது அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறேன்.

ரசிகர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ஆகவே ரசிகர்கள் தான் முக்கியம், என் படங்களை இந்தியா முழுக்க ஆஸ்கர் ரவிசந்திரன் இந்தியா முழுக்க வெளியிடுகிறார், அவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் விக்ரம் என்னை ஆச்சரியப்படுத்துகிறார். அவரது உழைப்பு அபாரமானது, வெற்றிக்கு வாழ்த்துகள் என்றார். பேசிமுடித்தவர், விழா தாமதமாக தொடங்கிய காரணத்தாலோ என்னவோ, இசை வெளியிட்டு நிகழ்வுக்கு முன்பாகவே அரங்கை விட்டு வெளியேறினார்.
பசி ஒரு பிரச்சனை இல்லை - வியக்க வைத்த விக்ரம்

          பலுதூக்கும் இளைஞராக காட்டுமஸ்தான உடலைக் கொண்டு நடித்திருக்கும் விக்ரம், இப்படத்தில் வரும் இன்னொரு வயதான கதாபாத்திரத்திரற்கு 25 முதல் 30 கிலோ வரை தன் எடையை குறைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என விக்ரமிடம் கேட்டபோது, “பசி ஒரு பிரச்சையே இல்லை, சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். 


கனவு கதாபாத்திரமாக எல்லா நடிகர்களுக்கும் ஒரு விஷயம் இருக்கும். ஆனால் ‘ஐ’ படத்தில் நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு கேரக்டரை ஷங்கர் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்க முடியவில்லையே என படம் பார்க்கிற நடிகர்கள் வருத்தப்பட கூடும். அப்படி ஒரு கதாபாத்திரம். அந்நியன் படத்திலேயே என்னை வித்தியாசமாக காண்பித்தவர் அவர். என் உயிர் நண்பன் பாலா கூட அந்நியன் படம் பார்த்துவிட்டு,“நான் கூட உன்னை இந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை” என்று சொன்னார்.

நான் மெலிந்து இருந்த நாட்களில் யாரையும் சந்திகாமல், வீட்டை விட்டு வெளியே போகாமல் தான் இருந்தேன். பல விழாக்களை தவிர்ந்துவிட்டேன். என் ரசிகர்கள் என்னை சந்திக்க வந்தபோது கூட புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என் ரசிகர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.
‘ஐ’ டைட்டில் காரணம் சொன்ன ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் பேசும் போது, “இந்தப் படத்திற்கு அழகன் என்றோ அல்லது ஆணழகன் என்றோ தான் டைட்டில் வைத்திருக்க வேண்டும். இது இரண்டுமே ஏற்கெனவே வந்துவிட்ட காரணத்தால் வேறு டைட்டில் தேடினோம். எனக்கு ‘ஐ’ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ‘ஐ’ என்றால் என்ன என்று தேடினால், அதற்கு அழகு என்று பொருள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதனால் தான் இந்த டைட்டிலை வைத்தோம்” என்றார்.

படத்தில் ஏமி ஜாக்சனின் அழகைப்பார்த்து ‘மெரசலாகிட்டேன்...’ என்று பாடுகிறார் விக்ரம். ’ஐ’ படத்தின் டிரெய்லரைப் பார்ப்பவர்கள் சொல்லப்போவதும் அதே வார்த்தையைத் தான்...
“மெரசலாகிட்டேன்!”

0 comments: