Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    

குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை குளங்களில் மீன் வளர்ப்பதற்கான ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) போஸ்லின் வின்சென்ட்சாம், வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) பொன்காத்தபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்டோ, விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் மருங்கூர் செல்லப்பா, புலவர் செல்லப்பா, முருகேசபிள்ளை, அந்தோணி, வறுக்கத்தட்டு தங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி மீன்வளர்ப்பு

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் குளங்களில் மீன்வளர்ப்பதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மீன்வளர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி மீன்வளர்ப்பு உரிமம் ஏலம் விடப்பட்டிருப்பதாகவும், எனவே, அந்த ஏலஉரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடுவதற்கான பல்லிக்கூட்டம் அணை திட்டத்தின் தற்போதைய நிலை, பொய்கை அணையின் நீர்வரத்து கால்வாயான சுங்கான்ஓடை, இரப்பையாறு கால்வாய்களை சீரமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை, பேச்சிப்பாறை அணையை தூர்வாரும் திட்டத்தின் தற்போதைய நிலை போன்றவற்றை விவசாயிகள் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், அரசு மட்டத்தில் இந்த திட்டங்கள் உள்ளன. அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றனர்.

வருவாய் இழப்பு

பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்டோ, “தக்கலை பகுதியில் பட்டுப்போன மரங்களை வெட்டுவது தொடர்பான கோப்புகள் 50-க்கும் மேல் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார். இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில், சாவித்திரி ரக நெல் விதைகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. விவசாயம் தொடர்பான அனைத்து துறைகளையும் இணைத்து கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டு விட்டன. நெல் விலை ஏற்றத்தாழ்வை சரிசெய்ய அரிசி ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவேண்டும். வராத பட்சத்தில் அவர்களது சார்பாக கலந்து கொள்ளும் அதிகாரிகள், கூட்ட நடவடிக்கைகளை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

முன்னதாக, நீர்நிலை புறம்போக்கு இடங்களை அளவீடு செய்ய சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுத்ததற்கு வருவாய் அதிகாரிக்கு விவசாயிகள் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

0 comments: