Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
பூந்தமல்லி, 
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் பாகிஸ்தான் உளவாளி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலுக்கு அனுப்புவது பற்றி இன்று நீதிபதி அறிவிப்பார்.
பாகிஸ்தான் உளவாளி
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரியை தேசிய புலனாய்வு போலீசார் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கல்பாக்கம் அனுமின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் அடங்கிய சி.டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தன்னைப்போல் உளவாளிகள் 3 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த வருடம் மண்ணடியில் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது உளவு பார்த்தல் மற்றும் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன.
இவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அருண் செல்வராசன்
இதையடுத்து விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மற்றொரு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு போலீசார் கடந்த 10–ந் தேதி கைது செய்து பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அருண் செல்வராசனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேசிய புலனாய்வு போலீசார் கடந்த 12–ந் தேதி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.
கோர்ட்டில் ஆஜர்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண் செல்வராசன் கோர்ட்டில் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண் செல்வராசனிடம் போலீஸ் விசாரணைக்கு செல்ல விருப்பமா? என்று கேட்டார்.
அதற்கு அருண் செல்வராசன் எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார். எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்து நாளை (அதாவது இன்று) தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதையடுத்து அருண் செல்வராசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் பிள்ளை கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு கொடுக்கப்பட்டிருந்தது. எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை இன்று (புதன்கிழமை) நீதிபதி தெரிவிப்பார். மேலும் அருண் செல்வராசனிடம் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. அதிகாரிகளும் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

0 comments: