Monday, October 27, 2014

On Monday, October 27, 2014 by farook press in ,    









விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மையப்பகுதியில் ஓடும் ஜம்மனை ஆறு, சங்கிலிபள்ளம் ஓடை ஆகியவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள வெள்ளியங்காடு முத்தையன்கோவில், ஜம்மனை பள்ளம், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், நேருஜிநகர், பி.கே.ஆர்.காலனி, பெரியதோட்டம், சத்யாநகர் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
பெரும்பாலான வீடுகள் சேதம் அடைந்தன.இந்த வெள்ளப்பெருக்கில் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம், கல்லாங்காடு பகுதியில் உள்ள தரைபாலங்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. காங்கயம் ரோடுபுஷ்பா நகர் பகுதியில் உள்ள பாலத்தில் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக வந்ததால், தண்ணீர் செல்வதற்காக அந்த பாலத்தின் இணைப்பு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து, வெள்ளநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மேயர் அ.விசாலாட்சி, மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், துணைமேயர் சு.குணசேகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சங்கிலிப்பள்ளம் கரையோர பகுதிகளில் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதவாறு ஓடையில் இருக்கும் அடைப்புகளை எடுக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். இதுதவிர சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள பாலங்களில் மின்விளக்குகள் அமைத்து தொடர்ந்து வெள்ளத்தை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட குடும்பத்தினரை அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இன்னும் 2 நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. 

0 comments: