Friday, October 24, 2014

On Friday, October 24, 2014 by Unknown in ,    
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
மதுரை சேடப்பட்டியில் பிறந்த அவர் நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்களை கொண்ட வசனங்களை பேசி நடித்ததால், ரசிகர்கள் அவரை ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர் என்று அழைத்தனர்.
தேனி சட்டப்பேரவை தொகுதியில் 1962-ல் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய வரலாற்றில் தேர்தலில் வென்ற முதல் நடிகர் என்ற பெருமையும் எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு.
எஸ்.எஸ்.ஆர் சில ஆண்டுகள் திமுகவிலும் அதன்பின் அதிமுக விலும் இருந்து வந்தார். பின்னர், அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற அவர், சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் மனைவி தாமரைச்செல்வி மற்றும் மகன் கண்ணனோடு வாழ்ந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக எஸ்.எஸ்.ஆர். நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கவலைக்கிடமான நிலையில் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 11.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை, பூம்புகார், மறக்க முடியுமா, பார் மகளே பார், குங்குமம், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

0 comments: