Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே 2 பிரிவினர் மோதல் விவகாரத்தால் போலீசார் தொடர்ந்து முகாம்                                   கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- நாகவள்ளி. தம்பதியின் மகள் வினிதா (17), கடந்த ஜூன் 23ம் தேதி இப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போதும் இதுவரை குற்றவாளிகள் யார் என்று கண்டறியப்படவில்லை.

இதனிடையே, கடந்த 2ம் தேதி இரவு சிலர் போதையில் ஒரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக வந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்றிரவு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
 இருந்த போதும், நேற்று காலை சிலர் அங்கிருந்த வீடுகளின் முன் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர். மற்றும் சிலர் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த சின்னாதாராபுரம் ஏட்டு ஆனந்தன், கிராமத்தை சேர்ந்த கனகா (18), சித்ரா (17), பூர்ணிமா (16), சுரேஷ் (18) ஆகியோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மாயனூர் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 40 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிச்சம்பட்டி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வழியாக வருவோர்  தீவிர விசாரணைக்கு பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பிச்சம்பட்டி கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் வெளியூருக்கு சென்று விட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.மேலும், அக்கிராமத்தில் கரூர் எஸ்பி ஜோஷிநிர்மல்குமார், திருச்சி எஸ்பி ராஜேஸ்வரி, குளித்தலை ஆர்டிஓ சித்திரைராஜ், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வேணி ஆகியோர் தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.

0 comments: