Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in ,    
2016 தேர்தலுக்கு கூட்டணி அமைக்க வாசனுடன் ரகசியமாக பேச்சு நடத்தும் கட்சிகள்
காங்கிரஸ் கட்சியை உடைத்து ஜி.கே.வாசன் உருவாக்கும் புதிய கட்சி, தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கு அச்சாரமிடும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது காங்கிரசில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாசன் பக்கம் இருப்பார்கள் என்று கருதப்படுவதால், வாசனை தங்கள் பக்கம் இழுக்க இப்போதே கட்சிகள் போட்டா போட்டியில் இறங்கி விட்டன.
புதிய கட்சிக்கு தலைமை ஏற்று இருக்கும் ஜி.கே.வாசனுக்கு எல்லா கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். மூப்பனார் போலவே வாசனும் மற்ற கட்சியினருடன் நன்கு பழகியுள்ளார். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும், யாரையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதே இல்லை.
இந்த பண்பு வாசனுக்கு இப்போது கை கொடுத்துள்ளது. வாசனை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டால் காங்கிரஸ் ஓட்டுக்களை பெற முடியும் என்று பெரும்பாலான கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு அவர்கள் கடந்த 2 நாட்களாக வாசனுடன் ரகசியமாக பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் முதல் நபராக வாசனுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் வாசனிடம், உறுதியான முடிவு எடுத்து உத்வேகத்துடன் செயல்படுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
அதுபோல பா.ம.க., ம.தி.மு.க. தரப்பில் இருந்தும் வாசனுக்கு வாழ்த்துக்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட நட்பு ரீதியாக வாசனை தொடர்பு கொண்டு புதிய கட்சி குறித்து பேசி வாழ்த்தியதோடு சில அறிவுரைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாரதீய ஜனதா தேசிய தலைவர்களும் ஜி.கே.வாசனின் புதிய கட்சி தொடக்கத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் வாசனுடன் தொடர்பில் இருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் வாசனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக உள்ளன. 2016–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி ஏற்படுத்த வாசனின் வருகை உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வட்டாரத்திலும் வாசனை அரவணைக்க சில தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் வாசன் அ.தி.மு.க. கூட்டணி அல்லது தி.மு.க. கூட்டணியில் சேருவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
பா.ஜ.க., தே.மு.தி.க.வின் கூட்டணியில் அவர் இடம் பெறக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. வாசனின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மூலம் அவர் எந்த கூட்டணி பக்கம் செல்வார் என்பது தெரிந்து விடும்.

0 comments: