Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
திருப்பூர், திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 50 டன் எடையுள்ள மகா நந்தி சிலை அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பெங்களூருக்கு அனுப்பப்பட்டது.

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கற்களில் சிலைகள் செய்வதில் உலக புகழ்பெற்ற ஊராகும். இங்கு 150–க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி சிலைகள் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும், இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கும் இங்கிருந்து சிலைகள் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
திருப்பூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்குளியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் மட்டுமே சாமி சிலைகள் செய்வதற்கு ஏற்றது என்பதால் அங்குள்ள கல்குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, திருமுருகன்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டு சாமி சிலைகள் பிரத்யேகமாக செய்யப்பட்டு வருகிறது.
திருமுருகன்பூண்டி மெயின் ரோட்டில் ஸ்ரீ திருமுருகன் பழனிவேல் சிற்பக்கலை கூடத்தை நடத்தி வருபவர் டி.எம்.குமாரவேல் (வயது 59). சிலைகள் செய்வதில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் ஏழு தலைமுறையாக கற்களில் சிற்பங்களை செதுக்கி வருகிறார். இவரது மகன் வைத்தீஸ்வரன் (31). இவர் தந்தை குமாரவேலுவுடன் சேர்ந்து சிற்பங்களை செதுக்கி வருகிறார். கடந்த சில வருடங்களில் குமாரவேல் செதுக்கிய 23 அடி ஆஞ்சநேயர் சிலை பெங்களூருக்கும், 16 அடி உயரமுள்ள விநாயகர் சிலை, 9 நவக்கிரகம், ஒரு விநாயகர், ஒரு நரசிம்மர் என ஒரே கல்லில் 11 விக்ரகங்கள் ஆகிய சிலைகளை சென்னைக்கும் செய்து அனுப்பி சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது தஞ்சை பெரிய கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலையை விட பெரிய நந்தி சிலையை செய்துள்ளார். இந்த நந்தி சிலையை செய்தது குறித்து குமாரவேல் மகன் வைத்தீஸ்வரன் கூறியதாவது:–
இந்த நந்தி சிலையை 15 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் முத்தண்ணகிராஸ் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகள் ஒரே கல்லில் நந்தி சிலை செய்து தருமாறு கேட்டனர்.
இதற்காக நாங்கள் ஊத்துக்குளி, வெள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் 100 டன் எடை கொண்ட கல் கிடைக்கும் பகுதியை தேர்வு செய்தோம். இதற்காக கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரம் வேலையை ஆரம்பித்து நேற்று முன்தினம் முழுமையாக முடித்தோம்.
இந்த வேலையை எனது தந்தை குமாரவேல் மேற்பார்வையில் 15 மாதங்களில் முடித்துள்ளோம். இந்த மகா நந்தி சிலையானது 16 அடி நீளமும், 8 அடி அகலமும், 11 அடி உயரமும் கொண்டது. இந்த சிலை 50 டன் எடை கொண்டது. இந்த மகா நந்தி சிலையின் தலையில் 2 சீர் செய்யப்பட்ட கொம்புகளும், காதில் லோலாக்கு கம்மலும், நெஞ்சில் சிவலிங்கம் சிலைக்கு மேல் 5 தலைநாகம் படம் எடுத்து உள்ளது போலும், அதற்கு கீழே உத்ராட்ச கொட்டையும், குண்டுடன் ஒரு பெரிய மணியும், இத்துடன் சலங்கை, புஷ்பமாலை, துளசி மாலை என ஐந்து ரக ஆபரணங்களையும், காளையின் கால் குளம்பு, மூக்கு காது என அனைத்து உடல் பகுதிகளையும் தத்ரூபமாகவும், மேலும் அதேபோல் நந்தியின் மேல்பகுதியில் மன்னர்கள் அமர்ந்து வரும் சேனத்தை செதுக்கி உள்ளோம்.
மேலும் மைசூர், சாமுண்டீஸ்வரி கோவிலில் உள்ள நந்தி பாவனையில், அதாவது கர்நாடக மாநில பாணியில் இடது காலில் எழுந்து நடக்கும் வகையில், ஆண் காளையான இந்த மகா நந்தி சிலை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காளைமாடு சிலைகள் வலது காலில் எழுவது போல் தான் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நந்தி சிலை உட்கார ஒன்றரை அடி உயரத்தில் பூ வேலைபாட்டுடன் பீடமும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மகா நந்தி சிலை இந்தியாவிலேயே பெரிய சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை முழுமை அடைந்த மகா நந்தி சிலை பாதுகாப்பாக கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்ப கலைக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு நந்தி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று இரவு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

0 comments: