Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
வாகன காப்பகங்களில் கேட்பாரற்று கிடந்த 876 வாகனங்கள் ஏலம் விடும் பணி நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வாகன காப்பகங்களில் பல நாட்களாக ஏராளமான வாகனங்கள் உரிமையாளர்கள் இன்றி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து வாகன காப்பகங்களில் கேட்பாரற்று கிடந்த வாகனங்களை கண்டறிய அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் கணக்கெடுப்பு நடத்தியதில் 17 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 876 வாகனங்கள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இந்த வாகனங்களை போலீசார் கைப்பற்றி ஏலம் விட நடவடிக்கை எடுத்தனர். முறைப்படி அந்த வாகனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, உடுமலை போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட 78 இருசக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களும் நேற்று ஏலம் விடப்பட்டது.
இதுபோல் இன்று(புதன்கிழமை) தாராபுரம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்திலும், நாளை(வியாழக்கிழமை) அவினாசி உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் அவினாசி தாலுகா அலுவலகத்திலும், பல்லடம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் திருப்பூர் தாலுகா அலுவலகத்திலும், உடுமலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட வாகனங்கள் மடத்துக்குளம் தாலுகா அலுவலத்திலும் ஏலம் விடப்படுகிறது.
மேலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காங்கயம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் காங்கயம் தாலுகா அலுவலகத்திலும், 25–ந் தேதி பல்லடம் உட்கோட்டத்துக்குட்பட்ட வாகனங்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் ஏலம் விடப்பட உள்ளன.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

0 comments: